search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பாஸ்கரன்"

    சிவகங்கை அரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது பழுதான வகுப்பறை கட்டிடத்தை அகற்ற உத்தரவிட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கை–மேலூர் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த பள்ளி இருக்கும் பகுதி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பள்ளியை கண்டதும் அமைச்சர் திடீரென அந்த பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.

    அப்போது பள்ளியின் கழிவறை, குடிநீர் வசதிகள் குறித்து அமைச்சர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பள்ளியில் முறையான குடிநீர் வசதி இல்லாததை கண்டு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விவரம் கேட்ட அமைச்சர், பின்னர் உடனடியாக குடிநீர் வசதி செய்து தர மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அங்கு கடந்த 1984–ம் ஆண்டு கட்டப்பட்ட பழுதான வகுப்பறை கட்டிடம் இடியும் நிலையில் இருப்பதை கண்ட அவர், அது குறித்து மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளரை தொடர்பு கொண்டு அந்த பழுதான கட்டிடத்தை 10 நாட்களுக்குள் அகற்ற உத்தரவிட்டார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உடனிருந்தார்.
    நவீன தொழில் நுட்பக் கருவிகளை பயன்படுத்தி குறைந்த அளவு தண்ணீரில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
    சிவகங்கை:

    மாவட்ட வேளாண்மைத் துறையின் சார்பில் வேளாண் பயிர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் சேகர் வரவேற்றார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் காப்பீட்டை நம்பி உள்ளனர். குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை. கிணறு, ஆழ்துளை கிணறு ஆகியவைகளில் தண்ணீர் இல்லை. மாவட்டத்தில் உள்ள 13 லட்சம் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. விவசாயத்திற்கு தேவையான பருவ மழை பெய்யாமல் பொய்த்து விடுகிறது. அதுமட்டுமன்றி வறட்சி ஏற்படும் நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடுகிறது.

    இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப கருவிகள், உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் மண்வளம் மற்றும் நீர்வள ஆதாரங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப விவசாயப் பணிகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

    தற்போது மாவட்டத்திற்கு ரூ.200 கோடி பயிர் இழப்பீட்டு தொகை கிடைத்துள்ளது. அதில் ரூ.105 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. ஒருசில இடங்களில் பயிர் இழப்பீட்டு தொகை குறைந்த அளவில் நிர்ணயம் செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் சென்னை சென்று, அதை சரி செய்தனர்.

    தமிழகத்தில் விவசாய உற்பத்தியில் சிவகங்கை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் தண்ணீர் இன்றி நாம் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாது. அதனால் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்யம் தொழில் நுட்பங்களை தற்போது வேளாண்மைத்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவைகளை விவசாயிகள் சரிவர பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மானியத் திட்டத்தில் ரூ.12.55 லட்சம் மதிப்பில் வேளாண் உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். இதில் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் செந்தூர்குமரன், கண்ணன், பரமசிவம், துணை இயக்குனர்கள் ராஜேந்திரன், சசிகலா, இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரன், வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா பெற விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி தலைவர் சதீஸ்பாபு தலைமையில் நடைபெற்றது. பகீரத நாச்சியப்பன் வரவேற்று பேசினார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலி, வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:– 

    காலச் சூழலில் நீங்கள் எந்த நிலையிலும் உயரலாம். யாருக்கும் எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் உண்டு. நமக்கு நல்ல பழக்கவழக்கம், தன்னம்பிக்கை, நாணயம், நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் உயரலாம். மாற்றுதிறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.

    நமது மாவட்டத்தில் உள்ள வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஏற்கனவே மனையிடம் இருந்தால் அவர்களுக்கு வீடு கட்ட அரசு உதவி செய்யும். மாற்றுதிறனாளிகளுக்கு உதவிடும் வகையில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது. இந்த அரசு தொடர்ந்து உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாற்றுதிறனாளிகள் மாவட்ட அலுவலர் சரவணகுமார், பேராசிரியர் ஆனந்தசெல்வம், டாக்டர் தீபக், மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் பிரபாகரன், பொருளாளர் லட்சுமணன், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சசிகுமார், மோகன், பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் ஆயிரம் வைசிய மகாலில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்பு அவர் பேசியதாவது:- தமிழக அரசு மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

    குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் நடத்தப்படுகிறது. அதில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்களை கண்டறிந்து அங்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.

    காரைக்குடியில் நடந்த முகாமில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், நலிந்தோர் உதவித் தொகைக்காக 13 பயனாளிகளுக்கு ரூ.32 ஆயிரம், தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித் தொகை மற்றும் ஓய்வூதிய உதவித் தொகைக்காக 26 பயனாளிகளுக்கு ரூ.47 ஆயிரத்து 250, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் சக்கர நாற்காலிகள் மற்றும் மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்க 6 பயனாளிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 790, தோட்டக்கலை துறையின் மூலம் பவர் டில்லர் வாங்க 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

    மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் மகளிர் தொழில் முனைவோர் கடன் மற்றும் பண்ணை சாராக் கடனாக 10 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம், மகளிர் திட்டத்தின் மூலம் 202 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 99 லட்சத்து 45 ஆயிரம், வட்டார வளர்ச்சி துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், தனிநபர் கழிப்பறை அமைக்க 20 பயனாளிகளுக்கு ரூ.ஒரு லட்சத்து 69ஆயிரத்து 872 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், உதவி கலெக்டர் ஆஷாஅஜித், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஆவின் சேர்மன் அசோகன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின்பு அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் கோவிலூர் சென்றனர்.

    அங்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் ஆகியோர் அந்த பகுதியில் இயங்கி வரும் ரசாயன ஆலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், நீர் நிலை, விவசாயம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி கூறினர். இதையடுத்து அமைச்சர், கலெக்டர் ஆகியோர் ஆலையின் பின் புறம் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்று, அங்கிருந்து மண் எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் மண் பரிசோதனை முடிவுக்கு பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
    பள்ளிக்கல்வி துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    சிவகங்கை:

    பள்ளிக்கல்வி துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். முதன்மைக்கல்வி அதிகாரி பாலுமுத்து வரவேற்று பேசினார். விழாவில் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்வதில் பெருமையாக உள்ளது. ஏனென்றால் நான் படித்த பள்ளி இது. நாங்கள் படிக்கும் போது எனது ஊரான தமராக்கியில் இருந்து 16 கி.மீ. சைக்கிளில் வந்து தான் படித்தேன். இன்று அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சைக்கிளை வழங்குவது மேலும் பெருமையாக உள்ளது. கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் தற்போது ரூ.9 கோடி மதிப்பீட்டில் 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது.

    தனியார் பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். இதனால் பல அரசு பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும். மேலும் தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி கையேடுகளையும் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். விழாவில் ஆவின் சேர்மன் அசோகன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஆனந்தன், கோபி, வருவாய் அலுவலர் லதா, தேவகோட்டை மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்தின் நன்றி கூறினார். 
    தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 304 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். பிஆர்.செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:- தமிழக அரசை முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் திறமையாக நடத்தி, பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர். அதன்படி அரசின் பல்வேறு திட்டங்கள் கிராமப் பகுதிகளிலுள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு வழங்கிடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் 304 பேருக்கு ரூ.3 கோடியே 21 லட்சத்து 16 ஆயிரத்து 677 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களாகிய நீங்கள் அரசின் திட்டங்களை பெறுவதில் அக்கறை காட்டி திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். மேலும் பெரியாறு பாசன கால்வாயிலும், வைகைப் பாசன கால்வாயிலும் முதற்கட்டமாக குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் விவசாயத்திறக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்துவோம்.

    அதேபோல் சிவகங்கை நகர்பகுதியில் நீர்வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகாமல் குளங்களுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் நீர்வரத்துக்கால்வாய் சீர் செய்யப்படும். மேலும் வேளாண்மைத்துறையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் ஆஷா அஜீத், தாசில்தார் மணிவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதி, துணை தாசில்தார் நேரு உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேவகோட்டையில் நடந்த புத்தகத்திருவிழாவை அமைச்சர் பாஸ்கரன் பார்வையிட்டார். அங்கு ஒவ்வொரு அரங்கமாக சென்று புத்தகங்களை பார்த்து, சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து பெற்றுக்கொண்டார். அமைச்சருடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிர்லா கணேசன், தேவகோட்டை நகர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் சுந்தரலிங்கம், தலைமை கழக பேச்சாளர் முகவை நெல்சன், பெருவத்தி, முருகன், தேவகோட்டை நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், சரவணன், நகர இளைஞரணி செயலாளர் சுபகார்த்திகேயன், முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    சிவகங்கை அருகே கொல்லங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு செய்து அங்கிருந்த பழுதடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த கொல்லங்குடியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் முன்னிலை வகித்தார்.

    முகாமில் கொல்லங்குடி, கீரனூர் கண்டனிப்பட்டி, சாத்தம்புளி, அரியாக்குறிச்சி, அழகாபுரி மேப்பல், பெரிய நரிக்கோட்டை, நடுவாளி, தச்சன்கண்மாய், உசிலனேந்தல், கல்லணை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வழங்குவதற்கு தேவையான பணிகள் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், புதிதாக மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், முதியோர் உதவித் தொகை மற்றும் தெருவிளக்கு அமைத்தல், பட்டா மாறுதல், பசுமை வீடு வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கினர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.

    அதன் பின்னர் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:-

    தமிழக அரசின் திட்டங்கள் கிராமப் பகுதிகளில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுவாக இந்த குறைதீர் முகாமில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாகவும், முதியோர் உதவித்தொகை கேட்டும் அதிக அளவில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கண்மாய் மடைகளை சீரமைக்க வேண்டும் என்றால் உடனடியாக இது குறித்து தகவல் தெரிவித்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் வக்கீல் ராஜா, ஆர்.எம்.எல் மாரி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சசிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோதாயுமானவன் நன்றி கூறினார்.

    முன்னதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொல்லங்குடியில் உள்ள தொடக்கப் பள்ளி கூடத்தை அமைச்சர் பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கிருந்த மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வகுப்புகளுக்கு வருகிறார்களா என்றும் சத்துணவு சரியாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.

    மேலும் அங்குள்ள குடிநீரை குடித்து பார்த்த அமைச்சர் அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கூட கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் அதை அகற்றிவிட்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    ×